சித்தயங்கோட்டை “மக்கள் விடுதலை  சேவை சங்கம்” திறப்பு விழா. குடி அரசு - சொற்பொழிவு - 28.06.1931 

Rate this item
(0 votes)

 ஆர்வமுள்ள அக்கிராசனாதிபதி அவர்களே! சகோதரிகளே!! சகோதரர்களோ 

இந்த ஊரில் மக்கள் விடுதலைசேவை சங்கம் என்பதாக ஓர் சங்கம் புதிதாக ஏற்படுத்த யுத்தேசித்து, அதை திறந்து வைக்க வேண்டுமென என்னை அழைத்ததற்காக நான் நன்றி செலுத்துகின்றேன். இவ்வூர் பிரமுகர்கள் அளித்த வரவேற்புக்கும், வாசித்துக் கொடுத்த உபசாரப் பத்திரப்புகழ் மொழிக்கும் நன்றி செலுத்தக் கடமைப்பட்டிருக்கின்றேன். அவை எனது தகுதிக்கும், அளவுக்கும் மீறிய வகையில் செய்யப் பட்டிருப்பதால், அவைகளை நான் ஏற்றுக்கொண்டேனென சொல்லுவதற்கு முடியாத நிலைமை யிலிருக்கிறேன். இயக்கத்தினிடம் உங்களுக்கிருக்கும் ஆசையால் மெய் மறந்து, அன்பினால் மரியாதை செய்திருக்கிறீர்கள். ஏனெனில், எனக்குப் பொருந்தாததும், மேம்பட்டதுமான வாசகங்கள் வரவேற்புப் பத்திரத்தில் மிகுதியும் காணப்பட்டிருக்கிறது. நமது அக்கிராசனர் உரைத்தது போல் மரியாதை செய்யும் முறையில் அதிகமாகச் செய்யப் பட்டிருக்கிற தென்ப தாகவே கருதினாலும் அவ்வார்த்தைகள் எனது கொள்கைகளுக்காதார மாயிருக்குமென நினைத்து அதன்மூலம் நீங்கள் ஆதரவளிப்பதாய்க் கருதி உங்களுக்கு நன்றி செலுத்துகிறேன். 

சகோதரர்களே! இன்று. இங்கு மக்கள் விடுதலைச்சங்கமென்பதை நான் சடங்கு முறையில் திறந்து வைக்க வேண்டியவனாயிருக்கின்றேனே யொழிய வேறு வகையிலில்லை. ஏனெனில், அது ஏற்கனவே திறந்து தானிருக்கிறது. ஆனால், பொது ஜனங்களுக்கு விளம்பரம் செய்வதற்காக இப்படியொரு சந்தர்ப்பம் செய்து கொண்டிருக்கிறீர்களென்றே கருதுகிறேன். அன்றியும், இதைப்பொதுஜனங்கள் தெரிந்து, பயன்படுத்திக்கொள்ள வேண்டு மென்பதற்காகத்தா னிந்தச்சமயம் நானும் சில வார்த்தைகள் சொல்லுகின் றேனே யொழிய வேறில்லை. இதற்காகவே மற்றும் பல பெரியோர்களும் பல அரிய விஷயங்களை எடுத்துச் சொல்ல இங்கு வந்திருக்கிறார்கள், இச் சங்கத்தின் நன்மையைப் பற்றியும், அவசியத்தைப் பற்றியும் அக்கிராசனர வர்கள் எடுத்துரைத்தார். ஆனாலும், என்னிடமிருந்தும் சில வார்த்தைகளெதிர்பார்க்கிறீர்களென நினைக்கிறேன். இப்பொழுது உங்கள் ஊரில் நிறுவப்பட்டிருக்கும் இச்சங்கத்தால் நீங்கள் ஏராளமான நன்மையை யடையக் கூடும். ஆனால் நீங்கள் இச்சங்கத்தை சரியானபடி பயன்படுத்திக் கொள்ளத் தவறுவீர்களாகில், இச்சங்கத்தினால் யாதொரு பிரயோஜனமுமேற்படா தென்றே சொல்லுவேன். அதோடு இந்தக் கிராமத்திய மக்களுக்கு சரியான உணர்ச்சியில்லையெனவும்தான் கருத வேண்டும். இச்சங்கத்தால் மக்களுக்கு அறிவு புகட்ட வேண்டுமென்ற நோக்கத்துடன்தான் இவ்வூர் பிரமுகர்கள் முன் வந்து இவ்வளவு பிரபலமாய் இதைத் துடங்கி இருக்கிறார்கள். இச்சங்கமானது இன்று சித்தய்யங்கோட்டை மக்களுடையதாக இருக் கலாம், நாளை இச்சங்கமே மதுரை ஜில்லா முழுவதிலு முள்ள மக்களுடைய தாகலாம். பிறகு தமிழ்நாடுடையதாக விருக்கலாம். கடைசியாக இந்தியா தேசம் முழுவதும் பரவி உலக மக்களுக்கே அறிவுபுகட்டக் கூடிய தாகவு மிருக்கலாம். இச்சங்கத்தை இந்த ஒரு கிராமத்துக்கு மட்டுமென்று நினைத்து விடாதீர்கள். உலக மக்களுக்கே விடுதலை ஸ்தாபனமாக விளங்கவேண்டும் என்று கருதி வேலை செய்யுங்கள். ஒவ்வொரு நாடும் இவ்வாறு ஒவ்வொரு சங்கங்களை ஸ்தாபித்துத்தான், அந்தந்த நாட்டு மக்களுடைய விடுதலைக் காகப் பாடுபடுகின்றது. நாம் எந்தெந்த வகையில் நமது மக்களை விடுதலை செய்ய முடியுமென்பதை முதலில் யோசித்துப் பார்க்க வேண்டும். அதற்கு ஆதாரமாக மற்ற தேசங்களில் எவ்வாறு பாடுபட்டு மக்கள் விடுதலைய டைந்து மேன்மையை அடைந்திருக்கின்றார்களென்பதையும் உணர்ச்சி பெற்றிருக்கின்றார்களென்பதையு மறிந்துதான் நாமும் நமது மக்கள் விடுதலைக்கு வழிதேட வேண்டியவர்களாயிருக்கின்றோம். ஏனெனில் நமக்கு விடுதலை என்பதற்கே இன்னமும் அருத்தம் தெரியாதவர்களா யிருக்கிறோம். இந்த ஊரானது பெரும்பாலும் கைத்தொழிலாளிகள் நிறைந்த ஊராகும். ஆகவே இந்த ஊர் தொழிலாளிகள் எவ்வளவு தூரம் விடுதலை பெற்று எவ்வளவு தூரம் முன்னுக்கு வர வேண்டுமென்பது இந்த ஊர் தொழிலாளிகளைப் பார்த்தே தெரிந்து கொள்ளமுடியாது வெளிநாட்டு நிலையையும் பார்த்தால்தான் விளங்கும். உதாரணமாக இந்த ஊர் கைத் தொழிலாளி ஒருவன் தினம் 1-க்கு 4 அணா கூலி கிடைத்தால் போதுமென நினைக்கக்கூடும். ஆனால் மதுரையிலுள்ளவன் எவ்வளவு சம்பாதித்து எப்படி வாழுகின்றான் என்பதையும், மதராசிலுள்ளவன் எவ்வளவு சம்பாதித்து எப்படி வாழுகின்றான் என்பதையும் கவனித்துப் பார்த்தால் தான் அவனது நிலை எப்படிப்பட்டது என்பது அவனுக்கு விளங்கும் 

அதுபோலவே வெளிநாட்டிலும் அதாவது அமெரிக்காகாரன் எப்படி வேலை செய்து எவ்வளவு சம்பாதிக்கிறான்? ருஷியாகாரன், இங்கிலாந்துக் காரன் எப்படி சம்பாதித்து எப்படி வாழுகிறான் என்பதையெல்லாம் கவனித் தால்தான் கைத்தொழில் எப்படி இருக்கவேண்டும், எதற்கு முயற்சிக்க வேண்டும் என்பதெல்லாம் விளங்கும். ஆனால் நமது தொழிலாளிகளில் அநேகருக்கு ஒன்றுமே தெரியாது. விடுதலையென்றால் என்னவென்றும் தெரியாது. உதாரணமாக ஒரு தோட்டத்தில் வேலை செய்யக் கூடியவன், நாள் தோறும் 12மணி நேரம் வேலை செய்கின்றான். இன்னொரு தோட்டத்திலே தினம் 10 மணி நேரந்தான் வேலை செய்கிறார்கள். மற்றும் சில தோட்டங்களில் வேலை செய்பவர்கள் 10மணி நேரம் வேலை செய்தாலும் குடியிருப்பதற்கு ஒரு வீடும் அவர்களுக்குக் கொடுக்கப்படுகிறது. இன்னும் சில தோட்டங்களில், மனிதர்கள் குறைந்த அளவு வேலை செய்வதுமல்லாமல் சரீரத்தால் அதிகப் பிரயாகை படுவதற் கில்லாமல் இயந்திரங்களுமமைக்கப் பட்டிருக்கின்றது. இவைகளை யெல்லாம் கவனிக்கக் கூடிய ஒரு தொழிலாளி, தனக்கும் அவ்வாறு உதவியை அளிக்கும்படியாக அதாவது விடுதலை வேண்டுமென கேட்கக்கூடும். ஆகையால் தொழிலாளி என்பவர்களும் அடுத்த தேசங்களைத் திரும்பிப் பார்த்தால் தான் அவர்களுக்கு விடுதலை யின்னதென்பதை அறிந்து கொள்ளமுடியும் 

அதுபோலவேதான் மற்ற மக்களும் மற்ற துறைகளிலும் விடுதலை என்பதை அறிய மற்ற நாடுகளையும் அங்குள்ளமக்கள் நிலையையும் உணரமுடியும். இம்மாதிரியான விடுதலை என்பதை நாமடைய வேண்டு மானால், அதற்கு நாம் எப்படி உழைக்கவேண்டும்? எந்தெந்தத் துறையில் முன்னேறியிருக்க வேண்டும்? முற்போக்குக்கு எவ்வாறு பாடுபட வேண்டும்? ஆகியவைகளை அவசியம் அறிய வேண்டும். மக்கள் விடுதலையடைவ தற்குரிய மார்க்கங்கள் எவை என்று யோசித்தால் பல இருக்கின்றன என்பது விளங்கும். பொதுவாக மக்கள் வளர்ச்சிக்கும், முன்னேற்றத்திற்கும் அவசி யம் வேண்டியிருப்பவைகள் கல்வி, செவ்வம், தொழில், சமூக சமத்துவம், பெண்கள் சமத்துவம், பெண்கள் விடுதலை ஆகியவைகளிலேயே நமக்கு முதன் முதலாக விடுதலை வேண்டியிருக் கின்றது. மற்ற தேசத்தாருடைய கல்வி, செல்வம், தொழில், சமத்துவம், நாகரீகம், விவாகம், விவாகரத்து ஆகியவைகளுடன் நமது தேசத்தையும் ஒப்பிட்டுப்பார்த்தால்தான் நமது நாட்டின் தன்மை நமக்கு சுலபமாக விளங்கும். அதோடு நமது நிலை இவ்வாறிருப்பதற்குக் காரண மென்ன? என்பதையும் அறிந்து அவை களினின்று விடுதலையடையும் படியான மார்க்கங்களைத் தெரிந்து, அதற்கென பாடுபட்டோமேயானால் நமக்கு நிச்சயமாகவே வெற்றியேற்படும். ஆகவே சகோதரர்களே! இவ்விஷயங் களில் என்னுடைய புத்திக்கு சரியென்று பட்டதையும், அனுபோகத்துக்கு ஒத்திருக்கக் கூடியவைகள் என்று பட்டவைகளைத்தான் உங்களுக்குச் சொல்லுகிறேன் நான் கூறும் விஷயங்களுக்கு ஆட்சேபணையே கிடையா தென்கின்ற தீர்மானத்தின் மீதாவது, அல்லது ஆட்சேபணையே இல்லை யென்ற எண்ணத்தின் மீதாவது நான் உங்களுக்குச் சொல்ல வரவில்லை. நான் கூறுபவைகள் எனக்கு நியாயமாக யிருக்கின்ற தென்பதுதான் என்னுடைய அபிப்பிராயமாகும். ஆதலால் அதை அலரியம் செய்ய உங்களுக்கு பூரண உரிமையுண்டு, நீங்கள் என்னுடைய அபிப்பிராயங்களையும் யோசனைகளையும் அறிய ஆவலுள்ளவர்களாயிருக்கின்றீர்கள் என்று நான் உணர்வதினால் எனக்குப்பட்ட உண்மையை உரைக்க வேண்டியவனாக யிருக்கின்றேன். அபிப்பிராய பேதங்களுக்கு மக்கள் கட்டுப்பட்டவர்களே யாவார்கள். ஒருவர் அபிப்பிராயம் மற்றொருவருக்கு பிடிக்காமலிருப்பது சகஜமேயாகும். ஆனால் அவர்களுக்குப் பட்டதை அவரவர்கள் சொல்ல இடம்தந்து அதை ஆராய்ந்து பார்ப்பது நியாயமும் அறிவுடைமையுமாகும். மக்கள் பலவித எண்ணங்களையுடைவர்களும், மனதையுடையவர்களுமாவார்கள். நமது எல்லோருடைய கண்களும் ஒவ்வொரு விஷயங்களில் ஒவ்வொரு மாறுதலு டையதாகத்தானிருக்கும். ஆனால் நன்றாய் அறிவு அனுபவம் ஆகியவை களைக் கொண்டு ஆராய்ச்சி செய்தால்தான், நாமும் உண்மையை உணர்ந்து ஒருவித முடிவை அடையமுடியும் இல்லையாகில் குழப்பத்தில்தான் இருக்க வேண்டும். 

ஆகவே சகோதரர்களே! நான் சொல்வனவெல்லாம் எனது சொந்த அபிப்பிராயங்கள் தான் என்று நான் சொல்வதோடு நான் ஒரு சாதாரண மனிதன் தான். நான் எவ்வித தெய்வத்தன்மை பொருந்திய ஒரு தீர்க்க தரிசியல்ல. ஆகையால், தனிமனிதன் என்கிற முறையில் தான் என்னுடைய அபிப்பிராயங்களையும், நான் பார்த்தும் ஆராய்ச்சி செய்தும் அனுபவத்தில் அறிந்ததுமானவைகளைத்தான் அதிலும் எனக்கு சரியென்று பட்டதைத் தான் உரைக்கின்றேன். ஒரு பெரியாருரைத்து விட்டா"ரென கருதி, நீங்கள் அப்படியே அவைகளைக் கேட்டு நம்பி விடுவீர்களானால், அப்பொழுது நீங்கள் யாவரும் அடிமைகளேதான். நான் உரைப்பவைகளை நீங்கள் நம்பாவிட்டால் பாவமென்றாவது தோஷமென்றாவது அல்லது நரகத்துக் குத்தான் போவீர்கள் என்றாவது சொல்லிப் பயமுறுத்தவில்லை, யார் உரைப்பதையும் கேட்டு நாம் வேதவாக்கென அப்படியே நம்பிவிட்ட தினால் தான் நாம் இன்று அடிமைகளாக யிருக்கின்றோம். நான் உரைப்பவைகளை ஆராய்ந்து பாருங்கள். உங்களுக்கு அவைகள் உண்மை யெனத் தோன்றி னால் அவைகளை ஒப்புக் கொள்ளுங்கள். இல்லாவிட்டால் தள்ளி விடுங்கள். உண்மையெனப் புலப்படுமாகில் அவைகளை உண்மையென ஒப்புக் கொள்ளுவதில் மட்டும் பிரயோஜனமில்லை. அதை அனுஷ்டானத்தில் கொண்டுவந்து அதன்படி நடக்க முயற்சியுங்கள். எனது சொந்த அனுபோகங் களை நான் அறிந்து உங்களுக் குரைப்பது தான் என்னுடைய விடுதலை. அவைகளை ஆராய்ந்து அறிந்து அதன்படி நடப்பதுதான் உங்கள் விடுதலை. 

கல்வி 

தற்காலம் கல்வியானது நமது நாட்டில் மிக்க மோசமான நிலைமை யிலிருக்கின்றதென்பதுதான் என்னுடைய அபிப்பிராயமாகும். அரசாங்க அறிக்கைகளின் மூலமாகவும் அடிக்கடி பிரசுரிக்கப்படும் புள்ளிகளின் மூலமாகவும் நமது நாட்டில் படித்த மக்களென்பவர்கள் 100க்கு 10 பெயர்கள் தானிருக்கின்றார்கள், பாக்கியுள்ள 90 பெயர்களும் தற்குறிகளாகத்தானிருக்கின்றார்கள். இவைகளிலும் பிராமணர்களைத் தள்ளி பிராமண ரல்லாதார் களில் 100க்கு எத்தனை படித்த மக்களிருக்கின்றார்களென்பதை பார்த்தோமே யானால், அவர்களோ 100க்கு 5பெயர் கூட படித்தவர்கள் இருக்க மாட்டார்கள். நாம்தான் அவ்வறிக்கைகளின் கடைசி வரியிலிருக்கின்றோம். அரசாங்க அறிக்கையிலும் பார்ப்பனரல்லாதாரில் அநேக வகுப்பார் கல்வியில் பின்ன டைந்திருப்பதால் அவர்களுக்கு என்று கல்வி சம்பளம் கூட குறைந்திருக் கின்றார்கள், பெண்களுக்கு சம்பளமே இல்லை என்றும் ஏற்பாடு செய்திருக் கிறார்கள். ஆனால் மற்ற நாடுகளில் 100க்கு 50, 60, 70 வீதமும் இன்னும் சில நாடுகளில் நமது நாட்டுப் பார்ப்பன சமூகம் போல 100க்கு 1000 மக்களும் படித்த வர்களாகயிருக்கின்றார்கள். நமது நாட்டில் மட்டும் 100க்கு 90 பெயர்கள் தற்குறியாயிருப்பதற்குக் காரணமென்ன? அதுவும் பார்ப்பனரல்லாதவர் சமூகம் 100க்கு 95க்கு தீண்டாதார் சமூகம் 100க்கு 991 ம் பெண்கள் சமூகம் 100க்கு 99 / யும் தற்குறிகளாயிருப்பதற்கு காரணம் என்ன? இதற்கு அரசாங்கமா காரணம்? என்பதை யோசித்துப் பாருங்கள். இதற்குக் காரணம் கண்டு பிடிக்க இதுவரை நாம் என்ன செய்திருக்கின்றோம்? என்ன செய்கின்றோம்? என்பதை கவனித்துப் பாருங்கள். அரசாங்கம் நமக்குக் கல்வி கற்றுக் கொடுக்க வில்லையா? அல்லது அரசாங்கத்தில் பண மில்லையா? அல்லது மக்களுக்கு கல்வி கற்கவேண்டுமென்கிற ஆசை யில்லையா? யென்பவைகளைக் கவனித்தோமானால் ஏன் மக்கள் கல்வி கற்கவில்லை என்பதற்குக் காரணம் விளங்கும். சகோதரர்களே. நமது சமூகம் இதற்கு முன் என்றைக் காவது கல்வி அறிவுடன் இருந்ததாக சொல்லக் கூடுமா? என்று யோசித்துப் பாருங்கள். அப்பொழுது அதன் உண்மை தெரியும், சர்க்காரார் பார்ப்பனர்களுக்கு மட்டும் தானா படிப்பு சொல்லிக் கொடுக்கின்றார்கள்? இல்லவே இல்லையே, எல்லோரையும் ஒன்றாய்தானே பாவிக்கிறார்கள். ஆதலால் இதிலுள்ள சூஷியை அறிந்தீர்களானால் விடுதலையின் உண்மைத் தத்துவம் விளங்கும். நமது மதத் தத்துவப்படிக்கு ஆதிகாலத்திலினின்னன்ன ஜாதிதான் கல்வி கற்க வேண்டுமென சட்ட திட்டங்களிருந்தன. படிக்க ஒரு ஜாதியும், படிப்பு சொல்லிக்கொடுக்க ஒரு ஜாதியும் இருந்து வந்ததோடு அதிலும் இன்னது இன்னதுதான் படிக்க வேண்டுமென்பதுமாகிய திட்டங்களும் ஆதியிலிருந்தது. இவைகளை நாம் வெளியிலெடுத்துரைத்தால், எல்லாரும் ஒத்துக்கொள்ளுகிறார்கள். ஆட்சே பனை செய்பவர்களெவருமேயில்லை. ஒரு தடவைதிரு. கோகலே அவர்கள் "பெண்களும் படிக்க வேண்டியது மிக்க அவசியமே. ஆகையால் அவர் களையும் ஆண் களைப் போல் பள்ளிக்கூடங்களுக்கனுப்ப வேண்டுமென பம்பாயில் உரைத்த பொழுது மக்கள் அவரைத் துன்பப்படுத்தி, இம்சித்து, *கோகலே அயோக்யன், அவன் இருப்பதற்கே தகுதியில்லை” எனவும் உரைத்தார்களாம். ஆண் மக்களின் நிவைமையை விட பெண் மக்களின் நிலைமை படிப்பு விஷயத்தில் மிக்க மோசமானதாகவே இருக்கின்றது. இதிலும் தீண்டாதார் எனப்படுபவர்களின் நிலைமையே இன்னும் இதைக் காட்டிலும் மிக்க மோசமானதாகவே இருக்கின்றது. கல்வி மக்களுக்கு அவசியமென்பதை அறிந்து மக்கள் ஒத்துக்கொண்ட போதிலும் கூட, மேல்ஜாதிக்காரர்கள் என்பவர்கள் மற்றவர்கள் படிக்காமலிருப்பதற்குரிய பல தந்திரங்கள் இன்னமும் செய்து கொண்டு தானிருக்கின்றார்கள். சில இடங்களில் தீண்டப்படாதாருக்கு பள்ளிக் கூடங்களே இல்லை. அப்படி பள்ளிக் கூடங்கள் சிலயிருந்தபோதிலும் கூட போதுமான உபாத்தியாயர்கள் அப்பள்ளிக்கூடங்களுக்கு அகப்படுவதுமில்லை. அப்படியொரு சமயம் பள்ளிக்கூடமும், உபாத்தியாருமிருந்த போதிலும் கூட தீண்டாதாரின் மக்கள் சில தெருக்களில் நடந்து அப்பள்ளிக் கூடங்களுக்குச் செல்ல உரிமை யில்லை. அவர்கள் அத்தெருக்களில் நடமாடக் கூடாதென தடுக்கப்படு கின்றார்கள். இவ்வளவு கஷ்டங்களையும் அவர்கள் மீறி, படிக்க ஆரம்பித் தாலோ அவர்கள் படிப்பதற்கு போதிய பணமில்லை. அவர்களுக்குப் போதுமான சாப்பாடில்லை. இத்தகையைக் கஷ்டங்களை நாம் எப்படி நீக்க வேண்டும்? என்று பார்த்தால் நமது சமூகத்திற்கு மதவிஷயத்தில் உள்ள முட்டுக் கட்டைகளை முதலில் நீக்குவதுதான் எல்லோரும் படிக்க முயற்சி செய்வ தாகும். மதத்தை காட்டாற்றிக்கொண்டு எல்லோரும் படிக்க வேண்டு மென்பது அறியாமையேயாகும். ஆதலால் மதக்கட்டுப்பாட்டை ஒழிக்க முதலில் முயற்சிக்க வேண்டும். அவ்வாறு முயற்சிப்பதற்கும் நமக்குத் தைரியம் வேண்டும். அவ்வித தைரியம் நமக்கு ஏற்பட்டால்தான் கல்வி விடுதலையுமேற்படும். இவைகளைவிட்டு, சரஸ்வதிகடாடிமில்லை, பணமில்லை. அரசாங்காத்தார் கல்வி கற்பிக்கவில்லை' என்று சொல்லிக் கொண்டிருந்தால் நாம் விடுதலை அடையத் தகுந்த புத்தி இல்லாதவர்கள் என்றுதான் சொல்லிக் கொள்ள வேண்டும். ஏனெனில், பிராமணர்களும் இந்த அரசாங்கத்தில் இருந்து கொண்டும் சாதாரண வரும்படியுள்ளவர்களுமாய் இருப்பவர்களேயல்லாமல், வேறு அரசாங்கத்தில் உள்ள பெரியப் பணக்காரர் களல்ல. அவர்கள் குமாஸ்தாக்களாகவும். காபி கிளப்புக்காரர்களாகவும், புரோகிதர்களாகவும், தடினை வாங்குபவர்களாகவும், சோம்பேறிகளாகவும் இருந்தும்கூட அவர்களில் 100க்கு 99 பெயர் எப்படி வாசிக்க முடிந்தது என்பதை யோசித்தோமானால் அப்பொழுதுதான் அதன் சூக்ஷம் புலப்படும். ஆகவே நமது நாட்டில் இப்பொழுது இருந்து வரும் மததர்மங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்குமானால் சிலரைத் தவிர்த்து பெரும்பாலான மக்கள் படிக்கவே முடியாது, நமது மத தர்மப்படி இன்னின்னவர்கள் தான் கற்றுக் கொடுக்க வேண்டு மெனவுமிருக்கின்றது. அந்த முறையை அஸ்தி வாரமாக வைத்தே இன்றைய உபாத்தியாயர்கள் எல்லாம் பார்ப்பனர் களாயிருக்கிறார்கள். இவர்களிடத்தில் படிக்கும் பிள்ளைகள் 100க்கு 90 பெயர்கள் தலையெடுக்க முடியாமல் போகின்றது. ஆகையால் இந்த முறைகள் நடைபெறும்படி யதுமதித்து கொண்டிருப்பதா? அல்லது இவைகளையழிப்பதுதான் நமக்கு விடுதவையை அளிக்குமா? என்பதை யோசனை செய்து பாருங்கள், 

 

செல்வம் 

நமது பொருளாதாரத் துறையை ஆராய்ச்சி செய்தோமானால்தான், நமது நாட்டில் எவ்வளவு செல்வமிருக்கின்ற தென்பதும், நமது நாடு செல்வமுள்ள நாடா? அல்லது ஏழை நாடா? என்பதும் விளங்கும். நமது நாட்டில் உள்ள ஒருவனுடைய சம்பாதனை தினம் ஒன்றுக்கு சராசரி 2 - அணாவுக்கும் கொஞ்சம் குறைந்ததாயிருக்கின்றது. ஆனால் மேல் நாட்டிலோ ஒருவனுக்கு தினம்தோறும் சராசரி ரூ. 2 வரும்படி அகப் படுகின்றது. இவ்வித நிலைமையை நாம் மாற்றவேண்டுமென எண்ணி, முயற்சிப்பதே பொருளாதார விடுதலையாகும். ஆகையால் இந்த விடுதலைக் கும் நாம் எப்படி எந்த முறையில் வேலை செய்ய வேண்டியிருக்கின்ற தென்பதை யோசனை செய்து பாருங்கள். நம்மிடத்தில் நமக்குப் போதுமான பொருளில்லையா? இல்லாதிருக்குமானால் அதற்குக் காரண மென்னயென் பவைகளை யோசனை செய்து பாருங்கள். நாம் பொருள் சம்பாதிக்கக் கடவுளைக் கும்பிடுகின்றோமே ஒழிய எந்த விதத்தில் பாடுபட வேண்டும்? எதனால் பொருள் கிடைப்பதில்லை என்று யோசிப்பதில்லை. நாம் கல்விக்கு எப்படி சரஸ்வதி என்று ஒரு பெண் தெய்வத்தை உண்டாக்கி வணங்கி வருகின்றோமோ, அதுபோலவேதான் நமது நாட்டு செல்வத்துக்கும் ஒரு பெண் தெய்வமாகிய வமியை உண்டாக்கி வணங்கி வருகின்றோம். ஆகையால் ஒருவன் தான் ஏழையாக யிருந்தால் தனக்கு வமி கடா மில்லை' என சுலபமாக எண்ணிக்கொண்டு வஸ்மி கடாக்ஷத்தை யடைய கையிலுள்ளதையும் கடன் வாங்கியும் செலவு செய்கிறான். பணக்கார வாயிருப்பவனும் தனக்கு "லஷ்மி கடாகா:'மிருப்பதாக நினைத்துக்கொண்டு அதற்கே தனது சொத்தை செலவு செய்து வருகிறான். 

ஓர் ஏழை ஒரு நாள் முழுவதும் கஷ்டப்படுகிறான். அவன் காலை 6 மணிக்கு கையில் மண்வெட்டியைப் பிடித்தானானால் பகல் 1 மணிக்குத்தான் கீழே வைக்கிறான். கொஞ்சமேதாகிலும் ஆகார முட்கொண்டு அவன் மீண்டும் 1-30 மணிக்கு மண் வெட்டியைப் பிடித்தானானால் மாலை 6-30 அல்லது 7 மணிக்குத்தான் கீழே வைக்கின்றான். இவ்வாறு இவன் ஓயாமல் கஷ்டப்பட்டும் இவனுடைய வேலைக் குத் தகுந்த கூலி யகப்படுவதில்லை. இதற்குக் காரணம் 'கடவுளின் கிருபையில்லை' யெனவும் 'வண்மி கடாடி மிருந்தால் தானே முடியு' மென்பதாகவும், 'தனக்கு இந்த வேலையையே செய்து பிழைக்க தலையில் பிரமன் எழுதிவிட்டான்' என்றும் கருதிக் கொண்டு வாழ்நாள் கழிய மண்வெட்டியையே நம்பியிருக்கிறான். அது போலவே சிறிதும் பாடுபடாமல் ஒருவன் பணக்காரனாயிருக்கின்றானே எனக் கேட்டால் "லஷ்மி கால்போட்டு விட்டாள்" என்பதாக சொல்லுகிறான். ஆகவே இந்த இரண்டு வித நிலைமைக்கும் ஒரே காரணத்தையுரைக் கின்றார்களே யல்லாமல், நாம் உண்மையறிய ஆராய்வதில்லை. மேல் நாட்டுக்காரர்கள் தங்களுடைய அறிவைதினமும் விருத்தி செய்து கொண்டே வருகிறார்கள். பல துறைகளையும் ஆராய்ந்து, பல வித தந்திரங்களால் அத் துறைகளில் ஆராய்ச்சி செய்து மேன்மேலும் முன்னேறிக் கொண்டே யிருக்கிறார்கள். தங்கள் தொழில் முறையை தாங்களாகவே மாற்றுகிறார்கள். ஒரு தொழிலில் இருந்து மற்ற தொழிலுக்கு தாராளமாய் பிரவேசிக்கிறார்கள். தங்கள் முன்னேற்றத்திற்கும் பின்னேற்றத்திற்கும் தங்களையே பொறுப்பாக் கிக் கொண்டு வாழ்க்கையை நடத்துகிறார்கள், தலைவிதியையும் நல்ல காலத்தையும் எதிர்பார்த்து சும்மாயிருந்து விடுவதில்லை. உதாரணமாக முதன் முதலாக கண்டுபிடிக்கப்பட்ட மோட்டாருக்கும், இப்பொழுது கண்டு பிடித்திருக்கப்பட்ட மோட்டாருக்குமுள்ள வித்தியாசங்களை நாம் கவனித் தோமானால் மேல் நாட்டுக்காரன் தொழிலில் முறையில் எவ்வளவு தூரம் முன்னேற்ற மடைந்திருக்கின்றான் என்பது புலப்படாமலிராது. 

ஆனால் நாமோ ஆதிகாலத்தில் டண்டாக்கப்பட்ட கட்டை வண்டி களினின்றும் இன்னும் நாம் சிறிதும் முன்னேற்றமடையாமல் இருக்கின்றோம். வேண்டுமானால் இரும்பு ஆணிகளுக்குப் பதிலாக வெள்ளி முலாம் பூசிய ஆணிகளை உபயோகிப்பதில் மட்டும் முன்னேற்ற மடைந்திருக்கின்றோம். 

தொழில் 

தொழிலில் நாம் முன்னேற்றமடையாததற்குக் காரணம் ஆதியில் மக்களை நான்கு வருணங்களாகப் பிரித்து அதாவது பிர்ம், - க்ஷத்திரிய, வைசிய, சூத்திரரென நான்கு வருணங்களாகப் பிரித்து 100க்கு 90 பெயர் களடங்கிய ஒரு கூட்டத்தை சூத்திரர்களெனத் தாழ்த்தி 'சூத்திரர்களுக்கு வயிற்றுக்கு மட்டும் உண்ணப் போதுமான உணவிருந்தால் அதுவே அவர்களுக்குப் போது மெனவும் அவர்கள் மற்ற மூன்று வருணத்தாருக்கும் தங்களுடைய சரீரத்தால் பாடுபட்டு உழைக்கவேண்டும்' எனவும் எழுதி வைத்துக்கொண்டு அத்தருமங்களின்படி நாம் நடந்து கொள்ள வேண்டு மெனவும் அதனின்று தவறக் கூடாதெனவும் தவறினால் பாபமெனவும் உரைக்கப்பட்டு வந்ததோடு அரசர்களும் இந்த சட்டத்தை காப்பாற்றி வந்ததால் நாம் தொழில் விர்த்தி இல்லாமல் போனதற்குக் காரணமாகும். இவ்வித நிலைமையின் பயனாய் பணம் சம்பாதிப்பவர்கள் - சீர்படுபவர்கள் யார் என்பதை யோசித்துப் பாருங்கள். பிராமணர்களுக்கும் க்ஷத்திரியர் களுக்கும் வைசியர்களுக்குமே தான் பணம் மேன்மேலும் சேருமேயல்லாமல் இந்த நிலையில் யார் எவ்வளவு பாடுபட்டாலும் தொழிலாளிகளாகிய *சூத்திரர்”களிடம் ஒரு நாளும் பணம் சேராது என்பதோடு வயிற்றுக்கு வேண்டிய அளவு கூட உணவு கிடைப்பது கஷ்டமாகத்தான் இருக்கும். 

இவ்வித நிலையால்தான் மக்கள் தங்களுடைய முயற்சியில் கவலை யற்றவர்களாக இருந்து கடவுள் மீது பொறுப்பைப் போட்டு அடுத்த ஜன்மத் தில் பணக்காரர்களாக பிறப்பதற்குத் தங்கள் குறைந்த வரும்படியுமான பணத்தையும் நேரத்தையும் செலவு செய்ய வேண்டியவர்களாயிருக் கிறார்கள் கடவுள் உணர்ச்சியே தான் அவர்கள் விடுதலையடைவதைத் தடுத்துக்கொண்டேயிருக்கிறது. 

ஆகவே பொருளாதாரத் துறையில் நாம் விடுதலை அடைந்து முன்னேற்றமடைய வேண்டுமானால் நாம் கவலையுள்ளவர்களாகி நம்மை ஏமாற்றி 'சூத்திரர்'களாக்கியவர்களுடன் சண்டை போட்டேதான் தீர வேண்டும். ஆகையால் நாம் அதற்காகக் கவலையில்லாதிருந்தாலும் அக் கட்டுப்பாட்டை ஒழிக்காமலிருந்தாலும் ஒரு நாளும் முன்னேற முடியாது. 

"நமது பெரியவர்கள் எப்படி இருந்து வந்தார்களோ அப்படியே இருக்க வேண்டுமேயொழிய புதிய மாதிரியில் நடக்கலாமா?' என்று நாம் கருதிக் கொண்டிராமல் “இரண்டு அணாவிலிருந்து இரண்டு ரூபாய் எவ்வாறு சம்பாதிக்க முடியும்? ஏன் சாம்பாதிக்க முடியாது? மற்றவர்கள் எப்படிச் சம்பாதிக்கிறார்கள்? மற்ற நாட்டிலுள்ளவர்கள் என்ன செய்கிறார்கள்? எட்டாடிச் சம்பாதிக்கின்றார்கள்?" என்பவைகளை யோசனை செய்து முன்னேறும் மார்க்கங்களை கண்டுபிடித்து அனுஷ்டானத்திலும் அதாவது நடை முறை யிலும் கொண்டு வந்தால்தான் பொருளாதாரத் துறையில் முன்னேற முடியும். 

ஒருவன் இரண்டு மாடுகள் ஒரு வண்டி ஒரு மனைவி இரு குழந்தை களையுடையவனாக இருந்தால் அவன் வண்டியோட்டி சம்பாதிக்கும் பணத்தால் பெயர்களைக் காப்பாற்ற வேண்டியவனாக இருக்கின்றான். இவ்வாறு கஷ்டப்படுவதினின்றும் விடுதலையடைய வேண்டுமானால் இயந் திரங்களினால் எவ்வளவுக்கெவ்வளவு நம்முடைய வேலையைச் சுருக்கிக் கொண்டு குறைந்த நேரத்தில் எவ்வளவுக்கெவ்வளவு அதிகமாக விர்த்தி செய்ய முடியுமோ அவ்வாறு செய்தால் மட்டுந்தான் நாம் விர்த்தியடைய முடியும், 

மானம் 

நமது நாட்டு மக்கள் தங்களுடைய மனிதத்தன்மையை இழந்து விட்டதினால் தான் நமது நாடு இன்று இம்மாதிரியான கேவல நிலைமை யிலிருப்பதற்குக் காரணம். ஏனெனில் நமது நாட்டு மக்களில் 100க்கு 3 பெயர்கள் உயர்ந்தவர்களெனவும், பூதேவர்களெனவும். பிர்மாவின் முகத் திலிருந்து உற்பத்தியானவர்களெனவும், பிராமணர்களெனவும் கூறப்பட்டு பாக்கியிருக்கப்பட்ட 97 பெயர்களும் கீழ் ஜாதி மக்களெனக் கருதப்பட்டு வருகின்றது. இந்த நிலைமை இந்தியாவில் ஜனித்த ஒரு காரணத்தி னாலேதான் நமக்கு எற்பட்டது. மற்ற நாடுகளில் இவ்விதமான அதாவது நிலைமையை அனுசரித்து கீழ் ஜாதியெனக் கருதப்படுவதில்லை. நமது மக்களுக்கு பாரம்பரியமாகவே மானமில்லையெனவும், மனிதத் தன்மையே கிடையாதெனவும் கூறுவதற்கு இந்த ஒரு காரணமே போதுமானதென நினைக்கின்றேன். மேலும் நாம் பெண்களை மிக்க இழிவாகவும். கௌரதைக் குறைவாகவும் நடத்துகிறோம். நமக்கு வேலையைச் செய்ய சந்தைக்குச் சென்று மாடுகளை விலை கொடுத்து வாங்கி வந்து, வேலை வாங்குவது போலவேதான் நாம் பெண்களையும் நடத்திக்கொண்டு வருகின்றோம். *புருஷன் வெளியில் வேலை செய்தால், பெண்ஜாதி அப்புருஷனுக்கு 

அடிமையாயிருந்து வீட்டில் வேலைசெய்தும், பிள்ளைகளைப்பெற்றும். அவர்களைக் காப்பாற்றுவதுந்தான் பெண்களின் வேலை'யெனவும், கடமை யெனவும் நாம் கருதி வருகின்றோம். நாம் மானங்கெட்டவர்களெனக் கூறுவதற்கு இதுவும் ஒரு காரணமாகும். கடவுள் சிருஷ்டியில் பெண்களை அடிமைகளாகவும். மனிதத் தன்மைக்கு லாயக்கற்றவர்களாகவும், சிருஷ்டிக்கப்பட்டதாய்க் கருதுகிறோம். இது இந்தியாவில் தானேயொழிய வேறு நாடுகளில் கிடையவே கிடையாது. நம் பெண் மக்கள் இவைகளி விருந்து விடுதலையடைய வேண்டுமானால் நமது பெண் மக்களுக்கு போதிய தைரியமும் வீரமும் வேண்டும். இவ்விரண்டும் அவர்களிடத்தில் இல்லை. நாம் ஆண்களும் பெண்களும் இந்தியாவில் பிறந்தவர்கள் என்று பெருமை யாக சொல்லிக் கொள்கிறோமேயன்றி வேறு ஒருவிதமான யோக்கியதையும் நம்மிடத்தில் இல்லை. தீண்டப்படாதார் என்பவர்களின் நிலைமையோ சொல்லத்தரமன்று. அவர்கள் 5, 6 கோடி மக்களாய் இருந்தும் ஒரு குடியான வனுக்கு 1000கால்நடைகள் ஆடு மாடுகள் இருப்பதுபோல் இந்திய மேல்ஜாதி மக்களுக்கு 5,6 கோடி மனிதக் கால்நடைகள் இருக்கின்றது என்றுதான் சொல்ல வேண்டும். இந்த ஒரு காரணமே போதும் இந்தியர்கள் அயோக்கியர் கள் என்பதற்கும் அடிமையாய் நடத்தப்பட தகுதி உள்ளவர்கள் என்பதற்கும் ஆதாரமாகும். 

நமது வீரம் 

நாம் இங்குதான் “பாரத வீரர்கள் பீமன் சந்ததிகள்” என்று மேடை யேறிப் பேசிக்கொள்ளுகின்றோமேயொழிய ஒரு அராபி தேசத்தவனை நடுத்தடத்தில் கண்ணில் பார்த்துவிட்டால் நமது மக்கள் ஆண் பெண் அடங்களும் நடுங்குகின்றன. காலுடன் மூத்திரம் பெய்ந்து கொள்ளுகின்றன. வெளி தேசத்திலிருந்து எவன் வந்தாலும் அவனைக் கண்டால் இப்படித்தான் நடுங்குகின்றோம். 

வெளிநாட்டுக்காரன் இங்கு வந்து சம்பாதித்துப் போவதற்குக் காரணமே நமக்கு வீரமும் நாணையமும் அற்ற தன்மையேயாகும். நமது கிராமங்களில் ஒரு அராபி தேசத்துக்காரன் 4 ரூபாய் பெரும்படியான ஒரு சால்வையை 8 ரூபாய்க்கு கொடுத்துவிட்டு 6 மாதம் பொருத்து வந்து பணம் கேட்டால் வெற்றிலை பாக்கு தட்டில் வைத்து சங்கராச்சாரிக்குக் காணிக்கை கொடுப்பது போல் பய பக்தியுடன் கொடுத்து விடுகின்றோம். அவனைக் கண்டால் நடுங்குகின்றோம். உள்ளூர்வாசியிடம் கடன்பட்டிருந்தாலோ, அவனுடைய கடனைக் கொடுக்க மறுப்பதல்லாமல் "பண்ணுவதைப் பண்ணு" என்றும் சொல்லுகிறோம். அயலூரானென்றால் நடுங்குகின்றோம். இதற்குக் காரணமென்ன ஏனெனில், நமது தைரியம் அவ்வளவில் தானிருக் கின்றது. மற்றும் ஓர் உதாரணம் என்னவென்றால் ஒரு ரயில் வண்டியில் ஆப்கன் தேசத்தான் ஒருவன் இருந்து அவ்வண்டி முழுமையும் காலியாக யிருந்தாலும் கூட நாம் அவ்வண்டியில் ஏற மாட்டோம். நாம் பத்துபெயர்கள் வரை ஒரு அறையிலுட்காந்து அவ்வண்டியில் இடமில்லாதிருந்த போதிலும் கூட வடதேசத்தான் ஒருவன் தைரியமாக அங்கே வந்து உட்காருவான். நாமும் உடனே வண்டியைக் காலி செய்து விடுவோம். 

ஆனால் நாம் காளி, வீரன், கருப்பன், முனியன், சடையாண்டி முதலிய “வீரம் பொருந்திய தெய்வங்களை" கும்பிடுகிறவர்களாகவுமிருக்கிறோம். எதற்காக கும்பிடுகிறோம் என்றால் அத்தெய்வங்களுக்குள்ள தைரியம் நமக்கும் வர வேண்டுமெனவேதான் என்கின்றோம். ஆனால் நாம் அதனால் தைரியமுடையவர்களாக வாகின்றோமா என்று பார்த்தாலோ, அப்படியு மில்லை . நமது தைரியமெல்லாம் முதலில் அடி, பார்க்கலாம்" என்பதிலும் அடி விழுந்தால் “ஓடுவதற்குள் என்ன அவசரம்” என்பதிலேயேதான் இருக்கின்றது. யார் அடித்தாலும், திருப்பியடிக்கக்கூடிய நிலைமையில் நாமின்று இல்லை 

முயற்சி 

முயற்சி விஷயத்தில் மேல் நாட்டாரோ "இமயமலை உச்சியைக் கண்டு பிடிக்க வேண்டுமென்றும் அதிவேகமாகப் பறக்க முயற்சிக்க வேண்டு' மென்றும். அவ்வித முயற்சியினால் மரணமடைந்தாலும் பரவாயில்லையென வும் மேல் நோக்கிக் கொண்டே சென்று கொண்டிருக்கிறார்கள். மேலும் நம்மை சுலபத்தில் எவ்வாறு அடக்க முடியும். எவ்வாறு நிரந்தரமாய் அடிமை கொண்டு இருக்க முடியுமென்பதற்குறிய மார்க்கங்களை ஆராய்வதிலுமிருக் கின்றார்கள். ஆனால் நமது இந்தியா விலோ ஒன்றுமே இல்லை. ஏனெனில் தைரியமும், வீரமும், நமக்கில்லை . உதாரணமாக, ஒருவன் ரூபாய் 400, ரூபாய் 500) வஞ்சம் முதலிய செலவுசெய்து ஒரு லைசென்ஸ் வாங்கி துப்பாக்கி வாங்கி இருந்தாலும் அந்தத் துப்பாக்கியின் குதிரையானது கெட்டுப்போய் குதிரையை கம்மாளனிடம் கொடுத்துவிட்டு கட்டையை முலையில் வைத் திருக்கும் பொழுது கூட நமது குழந்தைகள் தற்செயலாய் அந்தத் துப்பாக்கி யிருக்குமிடத்திற்கு சென்று விட்டாலோ உடனே 'துப்பாக்கி துப்பாக்கிய கிட்டபோகாதே போகாதே" என்று சத்தமிடுகின்றோம். ஏன்? நமக்கு பயமே அதிகமாயிருக்கின்றது. தைரிய உணர்ச்சியென்பது சிறிதுமில்லை. இதனால் நமது அறிவு எவ்வளவு தூரம் முதிர்ச்சியடைந்திருக்கின்றதென்பது புலப் படாதிராது. நாம் வீணாய் நாளை' என நாட்களை கழித்துக்கொண்டு தான் செல்லுகின்றோமேயல்லாது வேறில்லை. விஷயங்களை உணரக்கூடிய சக்தி நமக்கில்லை. அப்படி யாராவது உணர்ந்து சொல்ல வந்தாலும், நமது முன்னோர்கள் எவ்வளவு பெரியவர்கள் அவர்களுக்குத் தெரியாத சங்கதியா இவர்களுக்குத் தெரிந்து விட்டதா? இவர் நேற்று வந்த பயல்தானே அவரை விடவா இவன் பெரியவன்?' என உரைப்பதிலிருக்கின்றோம். 

இதற்குக் காரணம் என்னவென்றால் நமது அடிமைத்தனம் நம்முடைய தலையின் மீது ஏறி, உட்கார்ந்து கொண்டிருக்கின்றது. அது நமது அறிவை கூரில்லாமல் செய்துவிட்டது. நமது நாட்டிலிருக்கக் கூடிய அறிவாளிகளும்," "தீர்க்கதரிசிகளும்,' 'கவிவாணர்களும், 'தெய்வத் தன்மை பொருந்திய வர்களும்' பழைமையைக் குரங்குப்பிடியாக பிடித்துக் கொண்டிருக்கிறார்கள். பழைமையிலிருந்து அவர்கள் சிறிதேனும் நழுவுவார்களேயானால் அவர் களுடைய கவிகளை அரங்கேற்ற முடியவே முடியாது. அவர்கள் தீர்க்கத் தரிசிகளாகவு முடியாது என்பதே. 

மக்கள் ஒவ்வொன்றையும் யோசனை செய்து யுக்தியை செலுத்தி, புதிது புதிதாக ஒவ்வொன்றையும் கண்டு பிடிப்பதற்குத்தான் ஆராய்ச்சி எனக் கூறப்படும். ஆனால் நாமோ நமது முன்னோர்கள் என்ன செய்து கொண்டி ருந்தார்க ளென்பதை ஆராய்ச்சி செய்வதிலும், அதை நிலை நிறுத்த என்ன செய்ய வேண்டுமென்பதை ஆராய்வதிலுந்தான் ஆராய்ச்சி துறையில் இருந்து வருகின்றோமேயல்லாது, அதாவது பின்னால்தான் திரும்பி பார்த்துக்கொண்டிருக்கிறோமேயொழிய, முன்னோக்கி பார்ப்பதே இல்லை. ஆனால், மேல்நாட்டுக்காரனோ பின்னோக்குவதே கிடையாது. அவன் எப்பொழுதும் முன்னோக்கியே பார்க்கின்றான். அவன் ஏதாகிலும் ஒன்றைப் புதிதாக கண்டு பிடித்தால் மேன்மேலும் ஆராய்ச்சி செய்து 1930-ல் இப்படி இருந்தால் 1940-ல் இது எப்படி இருக்கும்? 1950ல் எப்படி இருக்கும்? 1950ல் எப்படியிருக்கும்? என்பதையே அறிந்து கொள்ள முயற்சிக்கின்றான். 

இதுதான் நமக்கும் அவர்களுக்குமுள்ள வித்தியாசம். உதாரணமாக ஒரு போர்டு மோட்டார் வண்டியையெடுத்துக் கொள்ளுங்கள். 20 வருடங் களுக்கு முன்னிருந்த ஒரு போர்டு வண்டியின் உருவம், இப்பொழுது எப்படியிருக்கின்றதென்பதைக் கவனித்துப் பாருங்கள். எல்லாம் புதுமாதிரி எவ்வளவோ சௌகரியங்களமைத்திருக்கின்றான், மேலும் அப்பொழுது மணி ஒன்றுக்கு 18 மைல் சென்றால், இப்பொழுது 90 மைல் வீதம் செல்லு கின்றது. ஒரு காலன் பெட்ரோலுக்கு அப்பொழுது 15 மைல் தூரம் சென்றால் இப்பொழுது 30 முதல் 40மைல் தூரம் செல்லுகின்றது. மோட்டாரில் காணப்படும் கோளாறுகளை குறைத்துக் கொண்டே முன்னேறிக்கொண்டு வருகின்றான் அவனுக்கு மனிதத் தன்மை, உணர்ச்சி, ஊக்கம். முயற்சி, கவலை ஆகியவைகளிருக்கின்றன. நமக்கோ அவைகளில்லை. ஆகையால் தான் நமது நாடு முன்னேறவில்லை. எது எடுத்தாலும் நமது நாட்டில் *பழைமை"வந்து குறுக்கிடுகின்றது. நமது நாட்டு மக்களில் மோட்டாரையே பாராத மக்களுமிருக்கின்றார்கள். தவறி ஏதாவதொரு மோட்டாரை பார்த்து விட்டாலோ "ரயில் வண்டி அறுத்துக் கொண்டு வந்து விட்டது” என சொல்லக் கூடியவர்களுமிருக்கின்றார்கள். இவைகளுக் கெல்லாம் காரணம் என்ன? நமக்குக் கவலை, ஊக்கமில்லை, முயற்சியுமில்லை. முற்போக்கடைய ஆசை யுமில்லை. நாடு முற்போக்கடைந்து விட்டால் சோம்பேறிகளுக்கு இட மிருக்காது என்பதுதான். நாம் ஒவ்வொன்றுக்கும் புராணக்கதைகளை பொப்பிட்டு, திருப்தியடைகிறோம். 

நமது முன்னேற்றத்திற்கு முட்டுக்கட்டையாயிருப்பவைகளில் முதன்மையானது. நமது புராணங்களிலும் மதக் கொள்கைகளிலும் நம்பிக்கை வைத்திருக்கும் மூடப்பழக்கவழக்கங்களுமேயாகும்.

சுகாதாரம், ஆயுள் 

இந்த கிராமத்தில் சுமார் 1000, 1500 வீடுகளிருக்கின்றன. இவ்வூர் வாசிகளிவநேகர் பெரிய பணக்காரர்களாகவுமிருக்கின்றார்கள். அப்படி யிருந்தும் உங்களுடைய தெருக்கள் எப்படியிருக்கின்றன? பார்த்தீர்களா? எவ்வளவு அசிங்கம்? எவ்வளவு குப்பை எவ்வளவு துர் நாற்றமுடைய தாயிருக்கிறது? இவ்வித நிலைமையிலிருந்தால் நமக்கு காயலா வருவதற்கு யாரைக் கேட்கவேண்டும்? நமது நாட்டு மக்களின் சராசரி வயது ஒவ்வொரு வனுக்கும் 24 தான் என கணக்கிடப்பட்டிருக்கிறது. ஆனால் மேல் நாட்டில் ஒவ்வொருவனுக்கும் சராசரி வயது 45 என்பதாக சொல்லுகிறார்கள். இதற்குக் காரணமென்ன? அங்கு "இயமன்' இல்லையா? நமது நாட்டு 'இயமன்' அவர்களிடம் சிறு வயதில் செல்லுவதில்லையா? அவனுக்கு நம்மிடம்தானா சதாவேலை இருக்கின்றது? என்று யோசித்துப் பாருங்கள். நமது நாட்டு மக்களிறந்துவிட்டால் உடனே "நாம் என்ன செய்வது' 'அவனுடைய சீட்டை பிரம்மதேவன் கிழித்துவிட்டான். விதி முடிந்தால் யார் என்ன செய்ய முடியும்?' என சொல்லிவிடுகிறோம். ஆனால் மேல் நாட்டானோ அப்படி இல்லை. அவன் யாராகிலும் காலராவில் இறந்துவிட்டால், உடனே ஆகாரம், தண்ணீர், காற்று முதலியவைகளை கவனித்து, ஆராய்ச்சி செய்து தக்க முறை களை கண்டுபிடித்து மற்றவர்கள் சாகாமல் இருக்க பாடுபடுகின்றானே யொழிய, நம்மைப்போல் ஓங்காளியம்மனைக் கும்பிடுவதில்லை. நமது மதராலைப் பொறுத்தவரையிலும் ஒரு உதாரணம் என்ன வென்றால், ஒரு தடவை சென்னையில் 15 நாட்கள் வரையிலும் காலரா இருந்ததினால், உடனே ஒரு மீட்டிங்கில் ஹெல்த் ஆபிசர் வேலைக்கு லாயக்கு இல்லை' என்பதாக ஒரு தீர்மானம் நிறைவேற்றிவிட்டார்கள், "ஹெல்த் ஆபிஸரும் அதற்குக் தக்கவாறு பதில் சொல்லி தனது முயற்சியில் 15 நாள் பொறுத்தாவது அடியோடு நிறுத்தப்பட்டதை எடுத்துக் காட்டினாரே அல்லாமல் கடவுள் செயலுக்கு நான் என்ன செய்ய முடியு'மென்பதாக உரைக்கவேயில்லை. அவர் அந்த வியாதியை நீக்குவதற்குரிய மார்க்கங்களை ஆராய்ச்சி செய்து அவ்வியாதியை அறவே நீக்க முயற்சிக்கின்றாரேயல்லாது எல்லாப் பொறுப்பையும் கடவுளின் தலை மீது சுமத்திவிட்டு, சும்மா இருந்து விடுவ தில்லை. நமது நாட்டு மக்கள் நோய் வந்தால் டாக்டரை அழைத்து வைத்யம் செய்வதற்குப் பதிலாக ஆடு, கோழி முதலியவைகளை அறுத்து பொங்க விட்டு சாமியை கும்பிட்டு விட்டு பேசாதிருந்து விடுகின்றோம். இவ்வித நிலமையில் நாம் இருந்து கொண்டு "விடுதலை" 'விடுதலை' யெனப் பெருங் கூச்சலிடுவதில் மட்டும் என்ன பயன்? நமது மக்களுக்கு வேண்டிய கல்வியை பாட்டி பெண் மக்களுக்கும் சுகாதாரத்தையும் அதன் அவசியத்தையும் கற்றுக் கொடுத்து, அவர்களை சுத்தமாக இருக்கும் படி செய்து வந்தால் சுகாதார விடுதலை அடைவோமா? அல்லது அவர்களை கவனியாமல் எல்லாம் கடவுளின் தலையில் சுமத்தி சாமியைக் கும்பிட்டுக் கொண்டு உட்கார்ந்து இருப்பதால் விடுதலைய டைவோமா? என்பதை சிறிது யோசனை செய்து பாருங்கள். 

நமது நாட்டு கர்ப்பஸ்திரீகளில் 100க்கு குறைந்தது 10 பெயர்களாவது இறந்து விடுகின்றார்கள் அப்பொழுது நாம் அவள் கருத்தரித்த நேரம் அப்படியிருக்கிறது, அவள் புருஷனுக்கு இரண்டு பெண்பாட்டி யோகம் இருக்கின்றது. அதற்கு நம்மால் என்ன செய்ய முடியுமென்பதாக மட்டும் உரைத்து, திருப்தியடைந்து விடுகிறோம். வியாதிகளைத் தடுத்துக் கொள்ளக் கூடிய அறிவை நாம் மக்களுக்குப் புகட்ட வேண்டும். அதற்குரிய சுகாதார வைத்திய மருத்துவ, கல்வி ஸ்தாபனங்களை நமது நாட்டில் பரப்ப வேண்டும். ஆனால் நமது நாட்டில் உள்ள செல்வவான்களும், நாட்டு கோட்டை செட்டிமார்களும் தங்களுடைய செல்வத்தைக் கோயில்கள் கட்டுவதிலும், கும்பாபிஷேகங்கள் செய்வதிலும், செலவழிப்பதிவேயே கண்ணும் கருத்துமாய் இருக்கிறார்களே யல்லாது மக்கள் முன்னேற்றத்திற்குரிய மார்க்கங்களில் செலவிடத் தயாராக இல்லை. இத்தகைய இவர்களு டைய செய்கையால் ஒரு சாரார் மட்டும். ஒரு கூட்ட மட்டும் பிழைப்பதற்கு வழி யேற்படுகிறதேயன்றி, எல்லா மக்களுக்கும் அந்தப் பொது ஸ்தாபனம் உபயோகப்படுவதில்லை. மேல் நாட்டு செல்வவான்களோ அப்படியில்லை. அவன் எல்லோருக்கும் உதவும் படியாக கல்விச் சாலைகளையும், ஆஸ்பத் திரிகளையும் ஸ்தாபித்து பொதுமக்களுக்குப் பயன்படும்படியான முறையில் உதவுகின்றான். நமக்கோ அவ்வித உணர்ச்சி கொஞ்சமேனும் கிடையாது. நமது மக்கள் விடுதலையடைய வேண்டுமானால் நாம் ஒவ்வொன்றையும் ஆராய்ச்சி செய்து கொண்டு வந்தால் தான் முடியுமேயன்றி வெறும் கூச்சல் மட்டும் போட்டுக்கொண்டிருந்தால் ஒரு நாளும் மக்களுக்கு விடுதலை கிடையவே கிடையாது. 

பெண்கள் விடுதலை 

நமது நாட்டுப்பெண்களை அடிமைகளைப் போலவும், மாடுகளைப் போலவுமே நாம் நடத்திக் கொண்டு வருகின்றோம். பெண்களும் தங்களை அடிமைகளென்றுதான் நினைத்துக் கொண்டு வருகின்றார்கள். பெண்கள் அவ்வித நிலைமையிலிருந்து விடுதலையடைய வேண்டுமானால், நாம் அவர்களுக்குச் சுதந்திர உணர்ச்சியுண்டாக்கிக் கொண்டும். ஊட்டிக் கொண்டும் வரவேண்டும். பெண்கள் ஆண்களின் அடிமையல்ல என்றும், அவர்கள் ஆண்களின் சிநேகிதர்களேயாவர்கள் என்றும் கருதும்படி நாம் அவர்களுக்கு விஷயங்களை எடுத்துக்கூறி அவர்களது உரிமைகளை அடைய வசதியளிக்க வேண்டும். வாயளவில் எழுத்தளவில் மட்டும் உரிமைகளளிப்பதாக உரைப்பதில் பிரயோஜனமில்லை. இப்பொழுது நமது இந்தியாவில் 35 கோடி மக்களிருக்கின்றார்கள். பெண்களையும் நாம் மக்களென நினையாமலும் அவர்களுடைய உரிமைகளை நாம் அவர்க ளுக்கு வழங்காமல் அவர்களை அடிமைகளென்று கருதி, நடத்திக்கொண்டு வந்தால், அப்பொழுது 177 கோடி மக்கள்தான் இந்தியாவில் மனிதர் களெனவும், பாக்கி 171, கோடி மக்கள் மிருகங்களெனவும் தான் கூற வேண்டும். நாம் அவர்களுக்கு வேண்டிய கல்வியை புகட்டாமலும், அறிவு வளர்ச்சிக்கான முறைகளில் அவர்களுக்குச் சுதந்திரமும். விடுதலை யுமளிக்காமலும், அவர்களை வெறும் சட்டி சுரண்டிகளாகச் செய்து விட்டோம். சுதந்திரத் தாய்மார்களாக நமது பெண்களிராவிட்டால் அவர்களது குழந்தைகளும் சுதந்திரமில்லாதவர்களாகவேதானிருப்பார்கள். ஆகையால், பெண்களுக்குத்தான் நாம் முதன் முதலாக விடுதலையளிக்க வேண்டும்.

விதவைகளின் முன்னேற்றம் 

விதவைகளை நாம் இன்னாட்டில் ஒன்றா சிறைப்படுத்தி அடிமை களாக இருக்கவும், இல்லாவிட்டால் விபசாரிகளென இருக்கவுந்தான் இந் நாட்டில் இடமிருக்கிறது. ஆனால் புருஷர்களையோ நாம் அவ்வாறாக நினைப்பதேயில்லை. அவனுக்கென்ன ஐயா! அவன் ஓர் ஆண்பிள்ளை, அவன் ஈக்குச் சமானமானவன் எந்த இடத்துக்கும் போகலாம், என்னமும் செய்யலாம்' என தைரியமாக உரைக்கின்றோம். விதவைகளை மட்டும் நாம் பலவந்தப் படுத்தி, ஜெயிலில் வைத்திருப்பது போல் வைத்து, அவர்களை வெளியேவிடாமல் காவல் செய்து வருகின்றோம். இது ஒருக்காலும் நியாயமாகாது. மேலும், 'கடவுள் செய' லெனவும் ஒரு காரணத்தைக்காட்டி அவளைப் பத்திரமாகக் காப்பாற்ற வேண்டியவர்களாகின்றோம். அவள் சிறிது மீறி நடந்துவிட்டால் உடனே அவள் 'விபசாரி' என சுலபமாகவே கூறிவிடுகிறோம். இயற்கைத் தத்துவங்களுக்கு ஆளாகாமல் இருப்பது என்பது இவர்களுக்கு விரோதமான காரியங்களால்தான் முடியும் ஆகவே ஒரு மனித ஜீவன் இயற்கை உணர்ச்சிக்கு விரோதமாய் இருப்பது என்பது கொடுமையான காரியமாகும். விதவைகளால் நாட்டுக்கு வெகு தொல்லை. மனித சமூகத்திற்கு வெகு கவலையானதாகும். ஒரு குடும்பத்தில் ஒரு விதவையிருந்தால் அக்குடும்பத்திற்கு எப்படியும் இழிவு ஏற்பட்டே தீரு கின்றது. விதவைத் தன்மையைக் காப்பாற்றுவது பெரிய கஷ்டமாகத் தானிருக்கும். ஆகையால் பெண்கள் விடுதலையிலும், கைம்பெண்களின் விடுதலையே மிக முக்கியமானதாகும். ஆகையால் அவர்களுக்கு உடனே விடுதலையை அளியுங்கள். விடுதலையளிப்பதாக உரைப்பதில் மட்டும் பிரயோஜனமிருப்பதாக நினைத்துக்கொள்ள வேண்டாம். இங்குள்ள வாலிபர் கள் யாவரும், ஒன்றாகச் சேர்ந்து, இனி 'விதவைகளையேதான் விவாகம் செய்து கொள்ளுவோம்' எனத் தீர்மானித்து, விதவைகளையே விவாகம் செய்து கொள்ள முன்வர வேண்டும். இது ஒருவகுப்பாருக்கு மட்டும் நான் கூறுவதாக என்ன வேண்டாம். எல்லா ஜாதியாருக்குமே இது உரைக்கப் பட்டதாகும். 

குறிப்பு: 2-05-1931 அன்று திண்டுக்கல் அருகிலுள்ள சித்தயங்கோட்டையில் மக்கள் விடுதலை சேவை சங்க திறப்பு விழாவில் ஆற்றிய உரை. 

குடி அரசு - சொற்பொழிவு - 28.06.1931

Read 63 times

நன்றி

வாசிப்பு இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள பெரியாரின் பொன்மொழிகள் புலவர் நன்னன் அவர்களின் "பெரியார் கணினி " நூலிலிருந்து எடுத்தாளப்பட்டுள்ளது. புலவர் நன்னன் அவர்களுக்கு எங்களது  நன்றியை  தெரிவித்துக்கொள்கிறோம்.  

வாசிப்பு
vaasippu.com

+91 99622 02869
support@vaasippu.com

Follow Us On

 

No Rights Reserved. All for Public Use.